காலத்திற்கு ஏற்ப வசதிகளைப் பயன்படுத்தும் மடாதிபதிகள், மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன் என்று பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது:-
பல்லக்கில் பவனி வருவது பாரம்பரிய பழக்கமாகும். அதை ஒருபோதும் கைவிட மாட்டோம் என சொல்லும் மடாதிபதிகள், தங்களின் மடத்து அறையில் குளிர்சாதனம் பொருத்தி இருக்கிறார்கள். குளிர்சாதனம் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த கார்களில் பவனி வருகிறார்கள். தொலைபேசி, கைபேசி, கணினி, வானொலி, தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்களை மடங்களில் வைத்திருப்பது ஏன்? பக்தர்களுக்கு அருள் உரையாற்றும்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றையெல்லாம் மடாதிபதிகள் பயன்படுத்தும்போது மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன். மடாதிபதிகள் யாராக இருந்தாலும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை விட்டு விட்டு ஒத்து வாழவேண்டும். இல்லையென்றால் மக்கள் புறக்கணித்து வைக்கப்படுவார்கள் என எச்சரிக்க விரும்புகிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மனிதர்களை, மனிதர்களே பல்லக்கில் சுமப்பது அடிமைச் சமூகத்திலும், நிலவுடைமை சமூகத்திலும் நிலவிய முறை. இப்போது அது மனித நாகரீகத்திற்கு ஒத்துவராத செயல் ஆகும். எனவே, தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தில் பல்லக்கு சுமத்தலை மாற்றுவதே சரியாக இருக்கும். அரசு உத்தரவை அமலாக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
