ஜம்மு- காஷ்மீர் தொகுதி மறுவரையறையை நிராகரித்த பாகிஸ்தான்!

ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, மறுவரையறையை நிராகரிப்பதாக கூறி இந்தி தூதரகத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370ஐ 2019ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் மூன்று பேர் அடங்கிய எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 2020 முதல் செயல்பட்டு வருகிறது. பல மாத ஆய்வுகளுக்கு பின் ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறுவரையறை செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 83ல் இருந்து 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகளுக்கான 24 தொகுதிகள் நிலுவையில் வைக்கபட்டுள்ளது. தற்போது வரையறை செய்யப்பட்டுள்ள 90 தொகுதிகளில் காஷ்மீர் மண்டலத்துக்கு 47 தொகுதிகளுக்கும், ஜம்மு மண்டலத்தில் 43 தொகுதிகளும் அமைய உள்ளது. இந்த தொகுதி மறு வரையறை மூலம் ஜம்முவில் மட்டும் கூடுதலாக 6 தொகுதிகளும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கூடுதலாக ஒரு தொகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறு வரையறையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் தொகுதி மறுவரையறை செய்த குழு உள்நோக்கத்துடனும், இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில், ‛‛ இஸ்லாமியர்கள் அதிகமுள்ள ஜம்மு காஷ்மீரில் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் அதிகாரத்தை நீக்கும் நோக்கில் தொகுதி மறுவரையறை குழு செயல்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை நிராகரிக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.