இஸ்ரேலில் சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் 1948 மே 14-ம் தேதி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த தினத்தை 5 இயர் என்ற ஹிப்ரூ நாட்காட்டி அடிப்படையில் ஆண்டு தோறும் சுதந்திர தினமாக இஸ்ரேல் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது. 5 இயர் என்ற ஹிப்ரூ நாட்காட்டி ஒராண்டிற்கு மொத்தம் 8 மாதங்களை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது. அந்த வகையில் 5 இயர் ஹிப்ரூ நாட்காட்டியின் அடிப்படையில் இஸ்ரேலின் 74-வது சுதந்திர தினம் நேற்று (மே 6) கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்தை இஸ்ரேல் மக்கள் கொண்டாடினர்.
இந்நிலையில், அந்நாட்டின் எலட் நகரில் உள்ள பூங்காவில் நேற்று இரவு சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. அங்கு பலர் கூடியிருந்தனர். கொண்டாட்டங்கள் நிறைவடைந்த சமயத்தில் அந்த பூங்காவிற்கு காரில் வந்த 2 பயங்கரவாதிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, கோடாரியை கொண்டு பூங்காவில் இருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் 2 பேரும் உடனடியாக அங்கிருந்து காரில் தப்பியோடிவிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலை பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக இஸ்ரேலியர்களை குறிவைத்து இஸ்ரேலில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் வசித்துவரும் அரேபியர்கள் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனை, மேற்குகரையில் உள்ளர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 16 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடியாக காசா முனை, மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.