சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருசில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர், கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். உலகளவில் 11 ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை பைசர் நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்நிலையில், 12வது ஆய்வு மையத்தை சென்னை ஐஐடி ஆய்வுப் பூங்காவில் அமைக்கிறது. ஆசியாவில் பைசர் அமைக்கும் முதல் ஆய்வு மையம் இதுவாகும். சென்னை ஐஐடியில் ரூ.150 கோடி செலவில், 61 ஆயிரம் சதுர அடியில் ஆய்வு மையம் அமைக்கப்படுவதாக பைசர் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மையத்தில் 250 ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுவார்கள் என பைசர் தெரிவித்துள்ளது. சர்வதேச விற்பனை, புதிய மருந்து உருவாக்கத்துக்கு இந்த மையம் பங்களிப்பை வழங்கும் எனவும் பைசர் நிறுவனம் கூறியுள்ளது.