பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து புதிய உச்சம்: ஐ.நா.

கடந்த ஆண்டு, உணவின்றி வாடியோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உணவுப் பஞ்சம் குறித்து ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.

உள்நாட்டு போர், தட்பவெப்ப மாற்றம், கொரோனா பரவல் ஆகியவை, லட்சக்கணக்கானோரை போதிய உணவு கிடைக்காத நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த, 2021ல் உள்நாட்டு போர் நடக்கும் தெற்கு சூடான், சிரியா, ஏமன், காங்கோ, ஆப்கன், எத்தியோப்பியா, நைஜீரியா உள்ளிட்ட 53 நாடுகளில், 19 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு அன்றாடம் உண்ண போதுமான உணவு கிடைக்கவில்லை. இது புதிய உச்சமாகும்.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளுக்கு கோதுமை, உரம் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது. இத்துடன், பணவீக்கம், எரிபொருள், உணவுப் பொருட்கள் விலை உயர்வால், இந்தாண்டு கூடுதலாக, 4.70 கோடிப் பேருக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த, 2016ல் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டோர், 11 சதவீதமாக இருந்தனர். இது, 2021ல், 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், உணவற்றவர்களுக்கு அளிக்கும் நிதியுதவி குறைந்துள்ளது. இத்தகைய உதவி, 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ல், 25 சதவீதம் குறைந்து, 60 ஆயிரத்து, 750 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. உலக நாடுகள் ஒன்றிணைந்து பசிப்பிணியை போக்க தாராளமாக உதவ வேண்டும். இல்லையெனில் வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.