வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

நளினி வேண்டுகோளை ஏற்க மறுத்து வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். முருகன் பரோல் கேட்டு சட்டபோராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

பரோலில் வெளியே வந்துள்ள நளினி நேற்று வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முருகனை நளினி சந்தித்துப் பேசினார். அப்போது உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அதனை கைவிட வேண்டும் என நளினி கேட்டுக்கொண்டார்‌. மேலும் முருகனுக்கு பழங்களையும் அவர் வழங்கினார். நளினி வேண்டுகோளை ஏற்க மறுத்து முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 7வது நாளாக இன்றும் அவர் ஜெயில் உணவை சாப்பிட மறுத்துவிட்டார். முருகனின் உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.