போர்க்குற்றங்களுக்கு புதின் தான் பொறுப்பு: கனடா பிரதமர்

உக்ரைனில் போரால் ஏற்பட்டுள்ள கொடூரத்தை நேரடியாக கண்டேன்; கொடூரமான போர்க்குற்றங்களுக்கு புதின் தான் பொறுப்பு’ என்று, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் மற்றும் ரஷ்யப் படைகளுக்கு இடையிலான கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை நேற்று பார்வையிட்டார். இர்பின் மேயர் ஒலெக்சாண்டர் மார்குஷின் இது குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் படங்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது, “ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் நகரத்திற்குச் செய்த அனைத்து பயங்கரங்களையும் தனது கண்களால் பார்க்க கனடா பிரதமர் இர்பினுக்கு வந்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

ஜி7 நாடுகள் கூட்டத்திற்குப் பிறகு உக்ரைன் தலைவருடனான செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ கூறியதாவது:-

கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புதின் தான் பொறுப்பு என்பது தெளிவாகிறது. ரஷ்யாவின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை நான் நேரடியாகக் கண்டேன். நமது வெற்றிக்குப் பின், உக்ரேனிய நகரங்களின் புனரமைப்புக்கு எங்கள் நாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம். கனடா கீவில் இன்று மீண்டும் செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புச்சாவில் நடந்ததைப் போல, இர்பின் நகரில் அப்பாவி குடிமக்களுக்கு எதிராக ரஷ்யப் படைகள் அட்டூழியங்கள் செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றதாக ரஷ்யப் படைகள் குற்றம் சாட்டப்பட்ட இர்பினுக்கு சென்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் பார்வையிட்டார். அதே போல, பல மேற்கத்திய அரசியல் தலைவர்கள் சமீபத்தில் இர்பினுக்கு பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்த கிழக்கு உக்ரைன் பள்ளிக்கூடம் மீது ரஷ்யா நடத்திய குண்டு வீச்சில் 60 பேர் பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது. தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில். ரஷ்யாவின் பார்வை கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியின் மீது தீவிரமாய் விழுந்துள்ளதால் அங்கு உக்கிரமான சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில், லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பிலோஹோரிவ்கா என்ற இடத்தில் பள்ளிக்கூட கட்டிடம் மீது ரஷ்ய போர் விமானங்கள் நேற்று முன்தினம் குண்டு வீச்சு நடத்தின. அப்போது அந்தப் பள்ளிக்கூட கட்டிடத்தில் பொதுமக்கள் 90 பேர் தஞ்சம் அடைந்து இருந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானது உறுதியாகி இருக்கிறது. மேலும் 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தகவல்களை லுஹான்ஸ்க் கவர்னர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துளளார். ரஷ்ய போர் விமானம் நடத்திய குண்டுவீச்சில் பள்ளிக்கூட கட்டிடம் தீப்பிடித்து கீழே விழுந்து, அந்தத் தீயை தீயைணப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி அணைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

போர் தொடங்கிய நாள்தொட்டு இதுவரை 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் தாக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. இதுபற்றி அதிபர் ஆலோசகர் டாரியா ஹெராசிம்சுக் குறிப்பிடும்போது, ரஷ்ய போர் குழந்தைகளுக்கு எதிரான போராகி இருக்கிறது என கூறினார்.

இதுவரை இந்தப் போரில் 225 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன. 413 பேர் படுகாயம் அடந்துள்ளனர். கிழக்கு டான்பாஸ் பிராந்தியம் முழுவதும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள அனாதை இல்லங்களில் இருந்து குழந்தைகளை திருப்பி அனுப்ப சர்வதேச உதவியை உக்ரைன் அரசு கோரி உள்ளது.

மரியுபோல் நகரத்தின் கோட்டை போல விளங்கி வந்த அஜோவ் உருக்காலையில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் பத்திரமாக வெளியேற்றுவது முடிந்துள்ளதாக உக்ரைன் மற்றும் ரஷ்யா அறிவித்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தொடங்கிய இந்தப் பணியை ஐ.நா.சபையும், செஞ்சிலுவை சங்கமும் ஒன்றிணைந்து மேற்கொண்டன. 300 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அதே நேரத்தில் அந்த ஆலையின் சுரங்கங்களில், பதுங்கு குழிகளில் உக்ரைன் படை வீரர்கள் உள்ளனர். அவர்களை பத்திரமாக வெளியேற்ற ராஜ்ய ரீதியிலான முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மரியுபோல் அஜோவ் உருக்காலையில் நேற்று காணொலிக்காட்சி வழியாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராணுவ உயர் அதிகாரி இல்லியா சமோலென்கோ, “சரண் அடைவது எங்கள் விருப்பம் அல்ல. ஏனென்றால் ரஷ்யா எங்கள் உயிர்கள் மீது அக்கறை காட்டவில்லை. சரண் அடைவது ஏற்கத்தக்கதல்ல. எதிரிக்கு இவ்வளவு பெரிய பரிசை வழங்க முடியாது. பிடிபடுவது என்றால் நாங்கள் இறந்து விட்டோம் என்றே அர்த்தம்” என குறிப்பிட்டார்.