உக்ரைனுக்கு ராணுவ உதவி: மசோதாவில் கையெழுத்திட்ட ஜோ பைடன்!

ரஷ்ய போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதற்கு இரட்டை கட்சி மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதத்துக்கு மேலாக போர் நடந்துவருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதற்கு இரட்டை கட்சி மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். இந்த மசோதா உக்ரைன் மற்றும் அதன் கிழக்கு ஐரோப்பிய நட்பு நாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டாம் உலகப் போர் கால “கடன்-குத்தகை” முறையை புதுப்பிக்கிறது.

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் உற்பத்தி செய்யப்பட்ட 2.5 கோடி டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதாக ஐ.நா உணவு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் உலக அளவில் உணவு பற்றாக்குறை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைனில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்களை வெளியே எடுத்து செல்ல முடியாதபடி ரஷ்ய கப்பல்கள் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளன. இதையடுத்து உலக நாடுகள் தலையிட்டு ரஷ்ய தடுப்புகளை நீக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களின் ஜெர்மனியை ரஷியா வென்றதன் 77-வது ஆண்டு தினம் ரஷியாவில் நேற்று கொண்டாடப்பட்டது. தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பும் நடைபெற்றது. அதன்பின், அதிபர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு மேற்கத்திய நாடுகளே காரணம். மேற்கத்திய கொள்கைகள் இந்த ராணுவ நடவடிக்கையை தூண்டின. உக்ரைனில் ரஷ்யா மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை சாத்தியமான ஆக்கிரமிப்பைத் தடுக்க சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மற்றும் தேவையான நடவடிக்கை ஆகும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் வெற்றி தினத்தையொட்டி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இரண்டாம் உலகப் போரில் நம் முன்னோர்கள் செய்ததை நாம் மறக்கமாட்டோம். இன்று கொண்டாடுவதை போல இன்னும் ஒரு வெற்றி நாளை விரைவில் கொண்டாடுவோம். அப்போது வென்றோம், இப்போதும் நாம் வெல்வோம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.