சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு, சிறுமூளையில் பாதிப்பு?

நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு, சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீன அதிபர் ஷீ ஜிங்பிங்(68), கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் செல்லவில்லை. இந்தாண்டு துவக்கத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரை, அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இதையடுத்து அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின. இந்தாண்டு இறுதியில், மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் அவருடைய சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், சீன மருத்துவ முறைகளின்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நம் அண்டை நாடான சீனாவின் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல், அதிரடி தாக்குதல் நடத்தக் கூடிய நீர்மூழ்கி கப்பலாக இருக்கலாம் என, சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. சீனாவின் லியோனிங்க் மாகாணத்தில் உள்ள ஹூலுடாவ் துறைமுகத்தில், சமீபத்தில் ஒரு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இது, நீர்மூழ்கி கப்பல் என்பது, ‘சாட்டிலைட்’ படங்களில் இருந்து தெரியவந்துள்ளது. கடலில் மிதக்கும் கப்பல்கள் மற்றும் நீருக்கு அடியில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக்கூடிய, அதிக திறனுடைய ‘ஹன்டர்’ வகை நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவிடம் இல்லை. அடுத்த சில ஆண்டுகளில், இதுபோன்ற நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக, கடந்தாண்டு நவம்பரில், அமெரிக்க ராணுவம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், ஹன்டர் போன்ற அதிக திறனுள்ள நீர்மூழ்கி கப்பல், சீன துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, போர் ஆயுத நிபுணர்கள் இடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல், புதிதாக உருவாக்கப்பட்டதா அல்லது ஏற்கனவே இருந்த நீர்மூழ்கி கப்பல் மேம்படுத்தப்பட்டு உள்ளதா என்ற விபரம் தெரியவில்லை.