முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ட்விட்டர் தளத்தில் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக ட்விட்டர் புதிய ஓனர் எலான் மஸ்க் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் தளத்தைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். பின்னர், திடீரென தன்வசம் இருந்த ட்விட்டர் பங்குகளை அவர் உயர்த்தினார். இதையடுத்து ட்விட்டர் போர்டில் அவர் உறுப்பினர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இதை ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த டீலை தடுக்கும் முயற்சியில் ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் சிலர் இறங்கினர். இருப்பினும், பெரும்பாலான ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் எலான் மஸ்க் டீலுக்கு ஒப்புக் கொண்டனர். ஒரு பங்கு 54 டாலர் என்ற வீதத்தில் ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். இதன் மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்த ட்விட்டர் தனிநபர் நிறுவனமாக மாறுகிறது. இன்னும் சில நாட்களில் இந்த டீல் முழுமையாக முடிந்து, எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் ட்விட்டர் நிறுவனம் முழுமையாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் கைகளில் ட்விட்டர் நிறுவனம் வந்த பிறகு, அதில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, எடிட் வசதி கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனி நபர் தவிர நிறுவனங்களை ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ட்விட்டர் தளத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாகவும் இப்போது எலான் மஸ்க் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஃபைனான்சியல் டைம்ஸ் ஃபியூச்சர் ஆஃப் தி கார் மாநாட்டில் பேசிய எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான ட்விட்டரின் தடையைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ட்விட்டரில் இருந்து ட்ரம்ப் தடை செய்யப்பட்டது, அவரது குரலை மௌனமாக்கவில்லை, மாறாக வலதுசாரிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அவரது கருத்து செல்லும் வேகத்தை அதிகப்படுத்தவே செய்துள்ளது. இந்தத் தார்மீக ரீதியாகத் தவறானது மற்றும் முழுக்க முழுக்க முட்டாள்தனமான முடிவு” என்றார்.
தன்னை பேச்சு சுதந்திரத்திற்கு ஆதரவாளராக எலான் மஸ்க் காட்டிக் கொள்ளும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2020 அதிபர் தேர்தலில் சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டதாகவும் வாக்குப்பதிவில் மாபெரும் மோசடி நடந்துள்ளதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. அமெரிக்க அதிபராக ஜோ பைடனை தேர்ந்தெடுக்கும் நிகழ்வின் போது, டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டனர். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைத்தளங்களும் டிரம்பிற்கு நிரந்தர தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சர்வதேச பொருளாதாரம், தொழில்நுட்பம், உற்பத்தியில் ஜப்பான் நாடு முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் எலான் மஸ்க் ஜப்பான் குறித்து வெளியிட்டுள்ள எச்சரிக்கை உலக நாடுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் மக்கள் தொகை எண்ணிக்கையில் வரலாற்றிலேயே மிகப்பெரிய சரிவைக் எதிர்கொண்டு உள்ளது. 2021 ஆம் ஆண்டின் தரவுகள் அடிப்படையில் அந்நாட்டு மக்கள் தொகை 644,000 குறைந்து 125.5 மில்லியனாக உள்ளது. இது கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாகக் கடுமையான எல்லை கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை சரிவாலும் இந்த நிலை உருவாகியுள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஜப்பான் வயதானவர்கள் அதிகம் உள்ள நாடாக இருக்கும் நிலையில் தற்போது மக்கள் தொகை சரிவும் அந்நாட்டின் பொருளாதார அடித்தளத்தை ஆட்டியுள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதியின் படி ஜப்பான் மக்கள் தொகை 125,502,000 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 644,000 குறைவும் என்பது மட்டும் அல்லாமல் 11 ஆண்டுகளாக மக்கள் தொகை எண்ணிக்கை சரிந்து வருவது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஜப்பான் 1950 முதல் வருடாந்திர மக்கள் தொகை கணக்கை நிர்வாகம் செய்து வரும் நிலையில் 2021ஆம் அண்டில் சரிந்த 644,000 தான் மிகவும் மோசமான சரிவு என ஜப்பான் நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத் தான் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் ஆபத்தான நிலை வெளிப்படையாகத் தெரிகிறது. இறப்பு விகிதத்தைக் காட்டிலும், பிறப்பு விகிதம் அதிகரிக்க ஜப்பான் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஜப்பான் அழியும் நிலை வரலாம். ஜப்பானின் இழப்பு உலக நாடுகளுக்குப் பெரும் இழப்பு என எலான் மஸ்க் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.