இந்துக்களை சமூகரீதியாக பிரிப்பது தான் பாஜகவின் திட்டம்: திருமாவளவன்

பாஜக திட்டம் வேறு; தமிழக அரசின் திட்டம் வேறு. இந்துக்களை சமூகரீதியாக பிரிப்பது தான் பாஜகவின் திட்டம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் 4 சட்ட மன்ற உறுப்பின‌ர்கள் மற்றும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதிய தொகையை விசிக தலைவர் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர். அதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள அனைத்து பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் குறிப்பாக ஈழத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளார். அதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனைவரும் உதவி வருகின்றனர். விசிக சார்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியம் சுமார் 10 லட்சம் ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளோம்.

அத்துடன் முதல்வரிடம் மூன்று கோரிக்கைகளை முதல்வருக்கு வைத்துள்ளோம். வடக்கு, கிழக்கு மாகாணத்தை ஒரே கவுன்சிலாக ஆதரித்து ஈழ மக்களுக்காக வழங்கிட தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த நிதியுதவி த‌மிழ‌ர்களு‌க்கு போய் சேர வேண்டும். அதற்காக இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர், தமிழ்நாடு அரசின் பிரதிநிதி ஒருவர், செஞ்சிலுவை சார்பில் ஒருவர் என குழு அமைத்து இந்த நிதி முறையாக அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மலையக தமிழர்களுக்கு இந்த நிதி உதவி சென்று சேர வேண்டும். இலங்கை பிரச்சனை குறித்து நாளை காலை தலைமை செயலகத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோவுடன் முதலமைச்சரை சந்திக்க உள்ளோம்.

பாஜக தலைவர் அண்ணாமலையின் எண்ணத்தை நீட் விவகாரத்தில் தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். பாஜகவின் திட்டங்களை தான் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்று அண்ணாமலை கூறி வருகிறார். ஆனால் பாஜக திட்டம் வேறு; தமிழக அரசின் திட்டம் வேறு. இந்துக்களை சமூகரீதியாக பிரிப்பது தான் பாஜகவின் திட்டம். அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுகவிற்கு எதிர்கட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.