இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. கடந்த 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் சர்ச்சைக்குரிய அந்த 2 பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஆனாலும் அந்த பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இஸ்ரேல் ராணுவ ஆட்சிக்குபட்ட பிராந்தியத்தில் வாழும் இவர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி அதிரடி தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர். இதுபோன்ற தேடுதல் வேட்டைகளின்போது அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் மேற்குகரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் நேற்று காலை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அல் ஜசிரா செய்தி தொலைக்காட்சியின் பெண் பத்திரிகையாளரான ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டார். மேலும் அவருடன் இருந்ந அலி சமூதி என்கிற மற்றொரு பத்திரிகையாளர் படுகாயம் அடைந்தார்.
51 வயதான ஷிரீன் அபு அக்லே, பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி சேனலான அல் ஜசிரா தெரிவித்துள்ளது.
இது குறித்து அல் ஜசிரா வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் சக ஊழியரை வேண்டுமென்றே குறிவைத்து கொன்றதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை மூடிமறைக்க எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.
ஆனால் தேடுதல் வேட்டையின்போது பாலஸ்தீன பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் துப்பாக்கிச்சூட்டில் காயங்களுடன் உயிர் தப்பிய பத்திரிகையளார் அலி சமூதி, இஸ்ரேல் ராணுவம் கூறுவது முற்றிலும் பொய் என்றும், ராணுவ வீரர்கள் தங்களை குறிவைத்தே சுட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்லப்பட்டபோது ஷிரின் அபு அக்லா, பத்திரிகையாளர்களுக்கான தற்காப்புக்கான ‘கறுப்பு நிற ஜாக்கெட்’ அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. கறுப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தும் அவர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1997-ம் ஆண்டு முதல் அல் ஜசிரா பத்திரிகையாளராக பணியாற்றி வந்த ஷிரீன் அபு அக்லேவின் மறைவுக்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.