டுவிட்டர் வாங்குவது தற்காலிக நிறுத்தம்: எலான் மஸ்க்

போலி கணக்குகள் குறித்து தகவல்கள் திரட்ட அவகாசம் தேவைப்படுவதால் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்துவதாக டெஸ்லா நிறுவனரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பங்குதாரர்கள், ஒழுங்குமுறை நிறுவனங்களின் ஆதரவு தேவை. எனவே இன்னும் அதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. இதற்கிடையே, போலி டுவிட்டர் கணக்குகளை முடக்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதனால், எலான் மஸ்க் வசம் டுவிட்டர் சென்றதும் போலி கணக்குகள் கட்டுப்படுத்தப்படும் என கருதப்பட்டது.

இந்நிலையில், மொத்த டுவிட்டர் பயன்பாட்டாளர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்தது. இதனையடுத்து, ‛போலி கணக்குகள் குறித்து தகவல்கள் திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுவதாகவும், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும்,’ எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.