பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசி விடலாம்: இம்ரான் கான்

பாகிஸ்தான் நாட்டை திருடர்களிடம் ஒப்படைப்பதை விட, அதில் அணுக்குண்டை வீசி விடலாம் என, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலுக்குப் பின்னர் பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாகப் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. ஏற்கனவே இலங்கையில் பொருளாதார பாதிப்பு கையை மீறிச் சென்றுவிட்டது. அதேபோல பாகிஸ்தான் நாட்டிலும் சில மாதங்களாகவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அந்நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் புகிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம் தனக்கு எதிராக அந்நிய நாட்டுச் சதி நடைபெற்றுள்ளதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டி இருந்தார். இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாட்டை திருடர்களிடம் ஒப்படைப்பதை விட, அதில் அணுக்குண்டை வீசி விடலாம் என்ற ரீதியால் சாடியுள்ளார்,

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் இம்ரான் கான் கூறியதாவது:-

நாட்டில் இப்போது இருக்கும் திருடர்களின் செயல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற திருடர்களிடம் நாட்டை ஒப்படைப்பதை விட, நாட்டின் மீது அணுக்குண்டை வீசிவிட்டு செல்லலாம். நடைபெறாத ஊழல் குறித்த கதைகளைக் கூறுவதற்குப் பதிலாக, நாட்டை முறையாக ஆட்சி செய்வதில் அவர்கள் கவனம் செலுத்தினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இப்போது ஆட்சியில் அமர்ந்துள்ள திருடர்கள் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து நிறுவன அமைப்புகளையும் அழித்துவிட்டார்கள். இப்போது இந்த குற்றவாளிகளின் வழக்குகளை எந்த அதிகாரி தான் விசாரிப்பார். வரும் மே 20ஆம் தேதி திட்டமிட்டபடி மாபெரும் பேரணி நடைபெறும். அப்போது நாங்கள் தலைநகருக்குள் நுழைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதேநேரம் அந்நாட்டின் இந்நாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானை இம்ரான் கான் பிளவுபடுத்த முயல்வதாகச் சாடி உள்ளார். பாகிஸ்தான் அரசு நிறுவன அமைப்புகளைக் குறிவைத்து இம்ரான் கான் பேசும் பேச்சுகள் நாட்டு மக்களின் மனதில் விஷம் கலக்கும் வகையில் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், அரசைத் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் இம்ரான் கான் நாட்டை பிளவுபடுத்த முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

தற்போதுள்ள பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இம்ரான் கான் வரும் மே 20ஆம் தேதி மாபெரும் பேரணி ஒன்றை அறிவித்துள்ளார். இந்த பேரணியில் சுமார் 20 லட்சம் மக்கள் வருவார்கள் என்று இம்ரான் கான் அறிவித்துள்ளார். 20 லட்சம் மக்களுடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நுழைவதே இம்ரான் கானின் திட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.