உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள்!

உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாதல், வறட்சி தினம் ஜூன் மாதம் 17 ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒப்பந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் உட்பட 23 நாடுகளில் வறட்சியால் அவசரநிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில், நாட்டின் 80 சதவிகிதம் வறண்ட அல்லது அரை வறண்ட நிலமாக உள்ளது.

மோசமான நில மேலாண்மை நடைமுறைகள் மற்றும் இயற்கை வளங்களுக்கான அதிகரித்த தேவைக்காக நிலத்தை பாழ்படுத்துவது போன்ற காரணங்களால் பாலைவனமாக்கல் ஏற்படுகிறது. வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பின்வருமாறு:

ஆப்கானிஸ்தான், அங்கோலா, பிரேசில், புர்கினா பாசோ, சிலி, எத்தியோப்பியா, ஈரான், ஈராக், கஜகஸ்தான், கென்யா, லெசோதோ, மாலி, மொரிட்டானியா, மடகாஸ்கர், மலாவி, மொசாம்பிக், நைஜர், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் சாம்பியா.

2050 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 40 லட்சம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு புனரமைக்கப்பட வேண்டும். வளரும் நாடுகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் பரப்பளவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு நிகரான, அதாவது 40 லட்சம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு மற்றும் இயற்கை பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி, அங்கு வறட்சி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும்.

பூமியின், 40 சதவீத நிலப்பரப்பு சீரழிந்து வருகிறது. இதனால் மனித குலத்துக்கும், உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதமும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். நவீன உலக வரலாற்றில் இதுபோன்ற சவாலை சந்தித்தது இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.