ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவையொட்டி, இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் (வயது 73), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13-ந் தேதி காலமானார். அவரது உடல் அன்று மாலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. ஷேக் கலீபா மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்தியா சார்பிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் அமீரக அதிபர் மறைவையொட்டி நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் அரசு துக்கமும் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமீரத்தின் துயரில் நேரடியாக பங்கு கொள்ளும் வகையில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று அமீரகம் சென்றார். அங்கு அவர் அமீரக ஆட்சியாளர்களை சந்தித்து இந்தியாவின் இரங்கலை தெரிவித்தார். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
இதைப்போல மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று டெல்லியில் உள்ள அமீரக தூதரகத்துக்கு நேரில் சென்று, நாட்டின் இரங்கலை தெரிவித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கையேட்டில் இரங்கல் குறிப்பு ஒன்றையும் எழுதினார்.