உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின. இந்நிலையில் ரெனால்ட் நிறுவன சொத்துக்களை தேசியவுடைமையாக்கி ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின. ஃபிரெஞ்ச் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் ரஷ்யாவை விட்டு வெளியேறியது. இதையடுத்து ரஷ்யாவில் இயங்கி வந்த ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை தேசியவுடைமை ஆக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை வீழ்த்த சதி நடப்பதாக உக்ரைன் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார். ஸ்கை நியூஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் உக்ரைன் ரஷ்யா போர் ஒரு திருப்புமுனையை எட்டும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த போரில் ரஷ்யா தோல்வி அடைந்தால், அதிபர் பதவியில் இருந்து புதின் அகற்றப்படுவார் என்றும் இதன் மூலம் ரஷ்யா வீழ்ச்சி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதின் மிகவும் மோசமான உளவியல் மற்றும் உடல் நிலை பாதிப்பில் இருப்பதாகவும், புடானோவ் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. பெர்லினில் நடந்த அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், பேசிய ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி அன்னலெனா பேர்பாக், உக்ரைன் தற்காப்புக்கு தேவைப்படும் வரை ராணுவ உதவியை ஜெர்மனி வழங்குவதாக கூறினார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என்றும், உக்ரைன் படையினர் தங்களது தாயகத்தை பாதுகாக்க தைரியமாக போரிட்டு வருவதாகவும்,நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.