லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு குரங்கு அம்மை!

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பிரிட்டன் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்கு சென்று லண்டன் திரும்பிய பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபருக்கு கடந்த வாரம் (மே 7) குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து விமான பயணத்தின்போதும், நாடு திரும்பிய பிறகும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க உரிய சுகாதார ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், லண்டன் மாநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் இவர்கள் எந்த விதத்திலும் தொடர்பில் இல்லாதபோது எப்படி தொற்று ஏற்பட்டது என்று குழம்பி போய் உள்ள சுகாதாரத் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘குரங்கு அம்மை தொற்றானது மக்களிடையே எளிதில் பரவாது. ஆனாலும் இந்த தொற்றுக்கு ஆளானவர்களிடம் இருந்து தனித்திருப்பது நல்லது. தெரிந்தோ, தெரியாமலோ பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு காய்சல், தலைவலி, தசை வலி, முதுகுவலி, குளிர், சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்’ என்று பிரிட்டன் சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

பிளவு ஏற்பட்ட தோல், கண், மூக்கு, வாய், சுவாசப்பாதை, போன்றவற்றின் மூலம் பரவும் இந்த அம்மை நோய், மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.