மேம்பாலத்தில் அவசரமாக தரையிறங்கியபோது கார் மீது விமானம் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் புரோவர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு விமானியும், 2 பயணிகளும் இருந்தனர். இந்த விமானம் மியாமி நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென எந்திரகோளாறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, விமானி விமானத்தை அங்குள்ள ஒரு மேம்பாலத்தில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி விமானம் மேம்பாலத்தில் அவசரமாக தரையிறங்கிய போது எதிர்பாராதவிதமாக ஒரு காரின் மீது மோதியது. அதன்பின்னர் விமானம் தீப்பிடித்து எரிந்தது. சற்று நேரத்தில் விமானம் முற்றிலுமாக உருக்குலைந்துபோனது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் விமானம் மோதிய காரில் பயணம் செய்த ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.