பிலிப்பைன்சில் முன்னாள் அதிபரின் மனைவி வீட்டில் மாயமான பிகாசோவின் ஓவியம்!

பிலிப்பைன்சில் முன்னாள் அதிபரின் மனைவி வீட்டில் மாயமான பிகாசோவின் ஓவியம் இருந்ததால் சர்ச்சையாகியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில், சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், சர்வாதிகாரியான முன்னாள் அதிபர் பெர்டினாண்ட் மார்கோசின் மகன், போங்போங் மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றி பெற்றார். ஜூன் 30ம் தேதி, நாட்டின் அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றுள்ள போங்போங் மார்கஸ் ஜூனியரை, அவரது தாயும், பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் முதல் பெண்மணியுமான இமெல்டா மார்கோஸ் ஆரத்தழுவி வாழ்த்து பரிமாறும் காட்சிகள் அடங்கிய, ‘வீடியோ’ ஒன்று, தற்போது வெளியாகி உள்ளது. அதில், சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரபல ஓவியரான பிகாசோவால் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம், விலை உயர்ந்த ஒன்றாகும்.

இமெல்டாவின் கணவர் பெர்டினாண்ட் அதிபராக இருந்தபோது, அதிகார துஷ்பிரயோகம் செய்து, தவறான வழியில் அதிக அளவிலான சொத்துகளை சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. அப்படி அவரால் சேர்க்கப்பட்ட சொத்துகளை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில், இந்த ஓவியமும் ஒன்று. எனினும், 2019ல், இந்த ஓவியம் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. காணாமல் போனதாக கூறப்பட்ட அந்த ஓவியம், மூன்று ஆண்டுகளுக்குப் பின், இமெல்டாவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.