ஈரானில் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டம்!

ஈரானில் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது.

ஈரானில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் போது மன்னர் முகமது ரேசா ஷா பகலவியின் ஆட்சி அகற்றப்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவில் தஞ்சமடைந்த நிலையில் பகலவி 1980-ல் காலமானார். ஈரானிய புரட்சியைத் தொடர்ந்து மதத் தலைவர் கொமேனி தலைமையிலான அரசு அமைந்தது. ஈரானைப் பொறுத்தவரை அமெரிக்காவை கடுமையாக எதிர்த்து சர்வதேச அரசியல் களத்தில் நிற்கிறது.

இந்நிலையில் ஈரானில் கடந்த சில நாட்களாக மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி இந்த கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஈரானின் அத்தனை நகரங்களிலும் மக்கள் புரட்சி வெடித்திருப்பதாக வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வீடியோக்களின் உண்மை தன்மை என்ன என்பது தெரியவில்லை. இருந்தபோதும் ஈரானில் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டிருப்பது அங்கு அரசியலிலும் எதிரொலித்து வருகிறது. இத்தனை ஆண்டுகாலம் தங்களது போற்றுதலுக்குரிய மத தலைவராக மதிக்கப்பட்ட கொமேனியின் படங்களையும் தீயிட்டு கிளர்ச்சியாளர்கள் எரித்தனர். மேலும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு மறைந்த மன்னர் ரேஷா பகலவிக்கு ஆதரவான முழக்கங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால் ஈரானில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.