கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதன் திருமணத்தில், நான், அண்ணன் அழகிரி, என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மாப்பிள்ளைத் தோழர்களாக இருந்தோம் என நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளராக இருந்த மறைந்த சண்முகநாதனின் பேரன் டாக்டர் ஆர்.அர்விந்ராஜ் -வி.பிரியதர்ஷினி திருமண விழா இன்று சென்னை கலைஞரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், சண்முகநாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, மணமக்களை வாழ்த்தியவர்கள் எல்லோரும் சண்முகநாதன் பற்றி பேசினார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ‘கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதை’. நானும் இங்கு பேசுவது அதுபோலத்தான். இருந்தாலும் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் கூற விரும்புகிறேன் எனப் பேசத் தொடங்கினார். அவர் பேசியதாவது:-

சண்முகநாதன் திருமணம் சண்முகநாதனுக்கு 1971-ஆம் ஆண்டு மணவிழா டைபெற்றது. முதலமைச்சராக இருந்த கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது சண்முகநாதன் அவர்களுக்கு நானும், நான் மட்டுமல்ல, என் அண்ணன் அழகிரி அவர்களும், அதேபோல என் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அனைவரும் மாப்பிள்ளைத் தோழர்களாக அன்றைக்கு இருந்து அந்தத் திருமண விழாவை நடத்தி வைத்தோம். அந்த அளவுக்கு அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தவர். அவரை யாரும் அப்பாவின் செயலாளர் என்று அழைக்க மாட்டோம். அப்படிப் பார்த்ததும் இல்லை. எங்களுடைய குடும்பத்தில் ஒருவராகத்தான், எங்களைப்போல கருணாநிதிக்கு ஒரு மகனாகத்தான் சண்முகநாதனும் கடைசி வரையில் இருந்தார். சண்முகநாதனை எல்லோரும் “குட்டி பி.ஏ, குட்டி பி.ஏ” என்றுதான் அழைப்போம். ஏனென்றால் அவர் முதன்முதலாகப் பணியில் வந்தபோது, ஒரு ஒடிந்த ஒல்லியான ஒரு உருவம், அதனால் அவரை எல்லோரும் செல்லமாக, பாசமாக, பெரியவர்கள் மட்டும் அல்ல, எங்களைப் போன்றவர்கள் மட்டுமல்ல, எனக்குப் பிறந்திருக்கக் கூடியவர்களும் கூட அவரைக் குட்டி பி.ஏ, குட்டி பி.ஏ என்றுதான் அழைப்பார்கள்.

எதிர்க்கட்சியாகத் தி.மு.க இருந்தபோது, அண்ணா, கருணாநிதி என யார் எங்கே போய்க் கூட்டத்தில் பேசினாலும் அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்கள் காவல்துறையில் இருந்து ஒற்றர்களை அனுப்பி வைப்பார்கள். அவர்களுடைய பேச்சுகளை எல்லாம் ரகசியமாக இருந்து அதைக் குறிப்பெடுத்து அரசுக்கு அனுப்பி வைக்கணும். அதற்கு ஒரு டிப்பார்ட்மெண்ட் இருக்கிறது. ரகசியத்துறை என்று சொல்லுவோம். அங்கே சில ஒற்றர்கள் பணியாற்றிக் கொண்டு இருப்பார்கள். அது காவல்துறைக்குக் கட்டுப்பட்டது. அந்தப் பணியில்தான் சண்முகநாதன் இருந்தார். கருணாநிதி சொன்னது எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் யார் பேசினாலும் அங்கே போய்க் குறிப்பெடுக்கிற அந்தத் துறையில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது கருணாநிதியின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்கே சண்முகநாதன் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து ரகசியமாகக் குறிப்பெடுப்பார். அப்படிக் குறிப்பெடுத்து அனுப்பிய அந்தச் செய்தி, கருணாநிதிக்கு தெரிந்தது. “பரவாயில்லை, நம்முடைய பேச்சைத் தப்பில்லாமல், பிரச்சினையில்லாமல், அப்படியே முழுதாகச் சிறப்பாக அதைக் குறிப்பெடுத்து அனுப்புகிறார் சண்முகநாதன்தான் என்றால் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்” என்று கருணாநிதி அடிக்கடி சொல்வதுண்டு.

1967-ல் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக, கருணாநிதி பொறுப்பை ஏற்றார். அப்போது யார் யார் அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களாக வரவேண்டும் என்று தேர்வு செய்தபோது, அப்போது மறக்காமல் கருணாநிதி, அதிகாரிகளிடத்தில் ஒன்றைச் சொன்னார். பக்கத்தில் நாங்கள் எல்லாம் இருந்து அதனைக் கேட்டோம். “யாரை உதவியாளராக நியமிக்கிறோமோ இல்லையோ, நான் எதிர்க்கட்சியாக இருந்து பணியாற்றியபோது, என்னுடைய பேச்சைக் குறிப்பெடுத்தானே, அவன் எனக்கு உதவியாளராக வரணும்” என்று சொன்னார். அதற்குப் பிறகு, பணியில் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, “உங்கள் விடுப்பை கேன்சல் செய்துவிட்டு உடனே வாங்க, பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக் கூடிய கருணாநிதி உங்களை அழைக்கிறார்” என்று அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். அன்றில் இருந்து கருணாநிதி மறைகிற வரையில், அவரோடு ஒன்றிப் பிணைந்து இருந்தவர் சண்முகநாதன்.

நாங்கள் எல்லாம் கூட அப்பா என்ற முறையில் கருணாநிதியிடம் அதிகம் பேசியது கிடையாது. ஆனால் சண்முகநாதன்தான் அதிகம் பேசியிருக்கிறார். கருணாநிதியும் அவரிடத்தில்தான் அதிகம் பேசியிருக்கிறார். நிறைய திட்டு வாங்குவார். திட்டு வாங்கிவிட்டு, கோபித்துக்கொண்டு இரண்டு நாள் வரமாட்டார். அதற்குப் பிறகு தானாக வந்துவிடுவார். இப்படிப் பல ஊடல்கள் கருணாநிதிக்கும் சண்முகநாதனுக்கும் அடிக்கடி நடந்திருக்கிறது. அதையெல்லாம் நான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன். கருணாநிதி மறைந்த பிறகும் தொடர்ந்து கோபாலபுரத்துக்கு வந்துகொண்டிருந்தார். தொடர்ந்து கோபாலபுரம் வீட்டில் வந்து உட்கார்ந்து, எப்படி, கருணாநிதி இருந்தபோது பணியாற்றினாரோ, அதேபோல அந்த வீட்டுத் திண்ணையில் ஒரு கூண்டு மாதிரி இருக்கும், அங்கேதான் உட்கார்ந்து டைப் அடிப்பார். கிரிக்கெட் விளையாடுவோம்

எங்களோடு, கோபாலபுரத்தில் இருக்கிற சில இளைஞர்களோடு, நாங்கள் எல்லாம் அந்தத் தெருவில் கிரிக்கெட் விளையாடுவோம். அப்போதும் அதிலும் வந்து கலந்துகொண்டு அவர் கிரிக்கெட் விளையாடியதையெல்லாம் நான் இன்று நினைத்துப் பார்க்கிறேன். அவர் மறைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, உடல் நலிவுற்று, அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை. வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய ஒரு கட்டாயம். அந்த நிலையில் இருந்தபோது, அடிக்கடி நான் அவர் வீட்டுக்குப் போய், மருத்துவமனைக்குப் போய் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வருவது உண்டு. அப்போது கொரோனா காலமாக இருந்ததால், காணொளிக் காட்சி மூலமாகத்தான் பொதுமக்களோடு, தொண்டர்களோடு பேசி வந்தேன். அப்போதெல்லாம் அந்தப் பேச்சுகளை எல்லாம் டிவியில் பார்த்துவிட்டு, முடிந்தவுடனே, போன் செய்வார். “தம்பி, உன் பேச்சைப் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதெல்லாம் பார்க்கிறதுக்கு அப்பா இல்லையே, தலைவர் இல்லையே” என்று அழுதுகொண்டே பேசுவார். அந்த அளவுக்கு என்மீது பாசம். இன்றைக்கு நான் எல்லாம் இந்த அளவுக்கு ஒரு முன்னேற்றத்தை, மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவுக்கு பெருமை பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு முக்கியமான காரணகர்த்தாக்களில் சண்முகநாதனும் ஒருவர் என்பதை நான் என்றைக்கும் மறந்துவிட மாட்டேன்.

சண்முகநாதன் என்னிடத்தில் இந்தத் திருமணத்திற்கு தேதியைக் கேட்டபோது, “நீங்கள் எதுக்கு என்னிடத்தில் தேதி கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன தேதி சொல்கிறீர்களோ அன்றைக்கு நான் வருகிறேன்” என்று நான் சொன்னேன். அந்தத் தேதியைச் சொல்லிவிட்டு, “நான் இருப்பேனோ இல்லையோ, நீ வந்து இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கணும்” என்று என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னபடியே, திருமணத்துக்குத் தேதி வாங்கினாரே தவிர, அந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளும் சூழ்நிலை இல்லாமல் அவர் மறைந்துவிட்டார் என்று எண்ணிப் பார்க்கிறபோது நான் வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.

கருணாநிதியின் எழுத்துகளை, உணர்வுகளை அப்படியே டைப் செய்து இன்றைக்கு “கலைஞர் கடிதங்கள், நெஞ்சுக்கு நீதி” புத்தகங்கள் எல்லாம் நாடு முழுவதும் பரவியிருக்கிறதென்றால், கருணாநிதி சில நேரங்களில் எழுத முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டபோது, அதை வார்த்தைகளால் சொல்லுவார். அதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு அதை அப்படியே அச்சு பிசகாமல், டைப் செய்து தருவார். இன்றைக்கு அந்தப் புத்தகங்கள் எல்லாம் எல்லோருடைய கையிலும் தவழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் சண்முகநாதன்தான்” என நெகிழ்ச்சசிகரமாக உரையாற்றினார்.