இம்ரான் கான் ஆதாரம் தந்தால், அவருக்கு பிரதமரை விட அதிக பாதுகாப்பு தரப்படும்!

முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தந்தால், அவருக்கு பிரதமரை விட அதிக பாதுகாப்பு தரப்படும் என, ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணை தலைவர் மர்யம் நவாஸ் சவால் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் பாகிஸ்தான் பார்லி.,யில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய இம்ரான் கான், தன்னை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ”பாகிஸ்தான் உடன் ஒரு வெளிநாடு இணைந்து உருவாக்கியுள்ள இந்த சதித் திட்டத்தில் தான் இறந்தால், சதிகாரர்களின் விபரங்களுடன் ஒரு ‘வீடியோ’ வெளியிடப்படும்,” என இம்ரான் கான் கூறிஉள்ளார். அந்த வீடியோவில் தான் குறிப்பிட்டுள்ள சதிகாரர்களை கைது செய்யும் வரை மக்கள் ஓயக் கூடாது எனவும், இம்ரான் கான் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே இம்ரான் கான் குற்றச்சாட்டு குறித்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மர்யம் நவாஸ் கூறியதாவது:

சதி திட்டத்திற்கான ஆதாரங்களையும், சதிகாரர்களின் விபரங்கள் அடங்கிய வீடியோவையும் இம்ரான் கான் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்தால், பிரதமர் ஷெபாஸ் ஷரீப்பிற்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விட இம்ரான் கானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இம்ரான் கான் தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறும் குற்றச்சாட்டை அடுத்து, பாக்., அரசு அவரின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும் என்று முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷித் அகமது, ஆளும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சரும், அவாமி முஸ்லிம் லீக் (ஏஎம்எல்) தலைவருமான ஷேக் ரஷித் அகமது, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் அந்நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. உணவு, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பல பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தற்போதைய கூட்டணி அரசானது, எந்த திசையில் செல்கிறோம் என்று கூட தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய நிலைமையை கையாள முடியாமல் தவிக்கிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு எதிர்கட்சிகளின் கூட்டணியில் பேரம் நடந்துள்ளது. 25 கோடி ரூபாய்க்கு வாக்குகள் விற்கப்பட்டன.

11 கட்சிகளின் அரசியல் கூட்டணி அரசின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னைகளை எப்படி தீர்க்கப் போகிறார்? சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லப் போகிறீர்களா? இல்லையா? என்பதை அறிவிக்க வேண்டும். கடந்த ஒரு மாதத்திற்குள் 6 பில்லியன் டாலர்களை நாடு இழந்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவருமான இம்ரான் கான் கைது செய்யப்பட்டால், பாகிஸ்தான் இலங்கையாக மாறும் என்று தற்போதைய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.