வட கொரியாவில் தீவிரமாக பரவும் கொரோனா!

வட கொரியாவில், கோவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், ஒரே நாளில், 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது.

உலகம் முழுதும் 2020ல் கோவிட் பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், அங்கு தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக, அந்நாடு அறிவித்துள்ளது.

நேற்று புதிதாக 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும்; ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது. இதையடுத்து, 2.6 கோடி மக்கள் தொகை உடைய வட கொரியாவில், காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 17 லட்சத்தை கடந்துள்ளது; பலி எண்ணிக்கை, 62 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கோவிட் பரிசோதனை உபகரணங்களின் தட்டுப்பாடு உள்ளதால், அங்குள்ள மக்களுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, பாதிக்கப்பட்டோரில் எத்தனை பேருக்கு, கோவிட் தொற்று உள்ளது என்பது இதுவரை தெரியவரவில்லை. இதேபோல, அங்கு கோவிட் தடுப்பூசிகள் இல்லாததும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே, சீனாவும், தென் கொரியாவும் தடுப்பூசிகளை வழங்க முன்வந்தன. எனினும், அவற்றை ஏற்க, வட கொரியா மறுத்தது. தற்போது மீண்டும், தடுப்பூசி வழங்க தென் கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதை, வட கொரியா ஏற்காமல் இருக்கிறது.