ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 1,730 பேர் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டில் படையெடுப்பை தொடங்கிய ரஷ்யா 3 மாதங்களாக அந்நாட்டின் முக்கிய நகரமான மரியுபோலை கைப்பற்ற முடியாமல் தடுமாறி வந்தது. ரஷ்யாவால் 2014 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட கிரீமியா மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் டன்பாஸ் பகுதிக்கும் இடையே மரியுபோல் நகரம் அமைந்து இருக்கிறது. எனவே எஞ்சி இருக்கக்கூடிய இரும்பு உருக்கு ஆலையை தக்க வைத்து மரியுபோல் நகரத்தை பாதுகாக்க உக்ரைன் படையினர் இரவு பகலாக போராடி வந்தனர். உருக்கு ஆலையை கைப்பற்றினால் முழு மரியுபோல் நகரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்ற கணக்கில் ரஷ்ய படைகள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தினர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2,000-க்கும் மேற்பட்ட உக்ரைன் படையினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால் அவர்களை மீட்க அந்நாட்டு அரசு முயற்சித்தது. அதன் விளைவாக 264 வீரர்கள் செவ்வாய்கிழமை பாதுகாப்பாக உருக்காலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஹன்னா மலியர் தெரிவித்தார்.
படுகாயமடைந்தவர்களில் 53 பேர் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசம் இருக்கும் நவோஸோவ்ஸ்க் நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 211 உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒலேனிவ்கா நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவார்கள் என ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை அறிவித்து இருக்கிறது.
அதே நேரம் அவர்கள் போர்க்குற்றவாளிகளாக நடத்தப்படுவார்களா? அல்லது போர்க்கைதிகளாக நடத்தப்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில், உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் தங்கள் படையினரிடம் சரணடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. சரணடைந்த உக்ரைன் படையினர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையிலடைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.