உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. தன் மீது பாலியல் புகார் தெரிவித்த நபருக்கு, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவன அதிபர் எலான் மஸ்க் சவால் விட்டுள்ளார்.
அமெரிக்காவின், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மற்றும், ‘டெஸ்லா’ நிறுவன அதிபர் எலான் மஸ்க், 2016ல் ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தபோது அவருக்கு, ‘மசாஜ்’ செய்த விமானப்பணிப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய 2018ல் அந்த பெண் முடிவு செய்ததை அடுத்து, அவரை சமாதானம் செய்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில், இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்கப்பட்டதாகவும், அந்த பெண்ணின் நெருங்கிய நண்பர் இது தொடர்பாக தகவல் தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியானது.
இதை எலான் மஸ்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது:-
நாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். அதில் ஒருபகுதியாக பைடன் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறேன். இதனால் என்மீது அரசியல் ரீதியான தாகுதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அவதூறுகள் எல்லாம் என்னை சிறந்த எதிர்காலத்திற்காக போராடுவதில் இருந்தும், சுதந்திர பேச்சு உரிமை குறித்து பேசுவதில் இருந்தும் தடுக்க முடியாது. எழுதி வைத்துகொள்ளுங்கள். என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை.
இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள நபருக்கு நான் சவால் விடுக்கிறேன். என் உடம்பில் உள்ள தழும்பு அல்லது, ‘டாட்டூ’ குறித்து அந்த பெண்ணால் கூறமுடியுமா. நிச்சயம் முடியாது, ஏனென்றால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.