படத்துக்கு அமைச்சர்களின் ஓசி டிக்கெட், பிரியாணி தான் திராவிட மாடலா?: சீமான்

உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு அமைச்சர்களே ஓசி டிக்கெட் மற்றும் பிரியாணி வாங்கி தருவதுதான் திராவிட மாடலா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமூக நீதி குறித்து பேசுகிறது என்பது பொதுவான பாராட்டு. இப்படத்தின் முதல் காட்சி தொடங்கி தற்போது வரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி விநியோகித்து வருகின்றனர்; உதயநிதியின் படத்தை பார்க்க வருகிறவர்களுக்கு உணவும் வழங்குகின்றனர் என்கிற தகவல்களும் வருகின்றன. மேலும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்துவிட்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் அது தொடர்பான படங்களையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கவும் செய்கின்றன.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தை இந்தியில் எடுத்தால் பிரமாதமாக இருக்கும் என்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. அந்த படமே ஆர்ட்டிக்கிள் 15 என்ற இந்தி படத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்பது அமைச்சர் நேருவுக்கு தெரியவில்லை. அமைச்சர்கள் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு இலவசமாக டிக்கெட் கொடுக்கின்றனர்; படம் பார்த்துவிட்டு வந்தால் பிரியாணி தருகின்றனர். ஆனாலும் கூட்டம் வரவில்லை என்கின்றனர். திமுக எம்பி ஒருவர் பெரியாரை நான் பார்த்தது இல்லை; உதயநிதியை நெஞ்சுக்கு நீதி படத்தில் காக்கி உடையில் பெரியாராக பார்க்கிறேன் என்கிறார். இது என்ன பெரியாருக்கு வந்த சோதனை! என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சீமான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்.. படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள்.
சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்! என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.