குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். டோக்கியா விமான நிலையத்தில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடாவின் அழைப்பை ஏற்று குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி நாளை அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர் பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமருடன் கலந்து கொள்வார். மார்ச் 2021-இல் குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் காணொலி வாயிலாகவும், செப்டம்பர் 2021-இல் வாஷிங்டன் டி.சி.யில் இரண்டாவது உச்சிமாநாடு நேரடியாகவும், மார்ச் 2022-இல் மூன்றாவது கூட்டம் காணொலி வாயிலாகவும் நடைபெற்றது.
இந்தோ-பசிபிக் பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் பரஸ்பர நலனின் சர்வதேச விஷயங்கள் முதலியவற்றில் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை வரவிருக்கும் உச்சிமாநாடு வழங்கும். குவாட் முன்முயற்சிகள் மற்றும் செயற்குழுக்களின் முன்னேற்றத்தை தலைவர்கள் ஆய்வு செய்வதோடு, ஒத்துழைப்புக்கான புதிய துறைகளைக் கண்டறிந்து, எதிர்கால கூட்டணிக்கான கேந்திர வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்குப் பார்வையையும் அவர்கள் வழங்குவார்கள்.
ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடாவுடன் பிரதமர் நரேந்திர மோடி மே 24-ஆம் தேதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார். கடந்த மார்ச் மாதம் ஜப்பான் பிரதமர் இந்தியா வந்திருந்தபோது நடைபெற்ற 14-வது இந்திய- ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டின்போது நடைபெற்ற கலந்துரையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் அளிக்கும். இந்தப் பயணத்தின் போது ஜப்பான் நாட்டின் தொழில்துறை தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவதுடன், அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றுவார்.
மே 24-ஆம் தேதி அன்று அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர். பைடனுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தையை பிரதமர் மேற்கொள்வார். அண்மையில் ஏப்ரல் 11-ஆம் தேதியன்று காணொலி வாயிலாக இரு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு அமையும். இந்திய-அமெரிக்க கேந்திர கூட்டுமுயற்சியை இரு தலைவர்களும் அப்போது ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக டோக்கியா விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று காலை சென்றடைந்தார். டோக்கியா விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பாரத் மாதா கீ ஜே! மோடி ஜி மோடி ஜி என முழங்கியபடி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர் இந்தியர்கள்.
இந்த பயணம் தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது:-
ஜப்பானில், நான்கு குவாட் நாடுகளின் தலைவர்கள் குவாட் முன்முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் நான் நேரில் பங்கேற்கவுள்ளேன். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள உலகளாவிய பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களையும் நாங்கள் பரிமாறிக்கொள்வோம்.
நான் அதிபர் ஜோசப் பைடனுடன் ஒரு இருதரப்பு சந்திப்பை மேற்கொள்ளவுள்ளேன். அங்கு அமெரிக்காவுடனான நமது பன்முக இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதிப்போம். பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் சமகால உலகப் பிரச்சனைகள் பற்றிய எங்களது உரையாடலைத் தொடர்வோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் முதல் முறையாக இணைகிறார். அவருடனான இருதரப்பு சந்திப்பை நான் எதிர்பார்க்கிறேன், அப்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே விரிவான மூலோபாய கூட்டுறவின் கீழ் பன்முக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு நமது சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையின் ஒரு முக்கிய அம்சமாகும். மார்ச் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் கிஷிடாவும் நானும் ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொது மற்றும் தனியார் முதலீடு மற்றும் நிதியுதவியில் 5 டிரில்லியன் ஜப்பான் யென் அளவை அடைய எங்கள் விருப்பத்தை அறிவித்தோம். வரவிருக்கும் விஜயத்தின் போது, இந்த நோக்கத்திற்காக, நமது நாடுகளுக்கிடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஜப்பானிய வர்த்தகத் தலைவர்களைச் சந்திப்பேன். ஜப்பானில் சுமார் 40,000 இந்தியர்கள் உள்ளனர். ஜப்பானுடனான நமது உறவுகளில் முக்கியமான பங்களிப்பை வழங்கி வரும் அவர்களுடன் தொடர்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.