பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்காது: தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்திய போது, மாநிலங்களுடன் ஆலோசிக்காத மத்திய அரசு, மாநிலங்கள் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என, எதிர்பார்ப்பது நியாயம் இல்லை என, தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த, 2014 முதல் 2021 வரை, பெட்ரோல், டீசல் மீதான வரியை, மத்திய அரசு கடுமையாக உயர்த்தியது. இதை குறைக்க, தமிழக அரசு விடுத்த தொடர் கோரிக்கை மீது, மத்திய அரசு இறுதியாக செவி சாய்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்தாண்டு நவம்பரில், மத்திய அரசு வரியைக் குறைக்கும் முன், 2021 ஆகஸ்டில், பெட்ரோல் மீதான, ‘வாட்’ வரியை தமிழக அரசு குறைத்தது. இதனால், லிட்டருக்கு 3 ரூபாய் அளவு விலை குறைந்தது. வரி குறைப்பால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. அ.தி.மு.க., அரசால் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலும், ‘வாட்’ வரி குறைக்கப்பட்டது. 2006 — 11ம் ஆண்டில், மக்கள் நலனுக்காக பெட்ரோல், டீசல் மீதான வரியை, அப்போது இருந்த தி.மு.க., அரசு குறைத்தது. ஏழு ஆண்டுகளில், பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள், கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால், மத்திய அரசின் வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ளது; ஆனால், மாநிலங்களுக்கான வருவாய் அதிகரிக்கவில்லை.

மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய, அடிப்படை கலால் வரியைக் குறைத்த அதே நேரத்தில், பெட்ரோல், டீசல் மீதான, ‘செஸ்’ மற்றும் உப வரி உயர்த்தப்பட்டதே, இதற்கு காரணம். கடந்த 2014 ஆகஸ்டில், மத்திய அரசின் வரிகள், பெட்ரோல் மீது லிட்டருக்கு, 9.48 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 3.57 ரூபாயாகவும் இருந்தன. 2021 நவம்பரில், மத்திய அரசு வரிகளை குறைப்பதற்கு முன், பெட்ரோல் மீதான மத்திய அரசின் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் உள்ளிட்ட வரி, பெட்ரோல் மீது 32.90 ரூபாய் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு 31.80 ரூபாயாகவும் உயர்ந்தது. மத்திய அரசு வரிகளை குறைத்தாலும், 2014ஐ விட தற்போதைய வரித் தொகை, பெட்ரோல் மீது லிட்டருக்கு 10.42 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 12.23 ரூபாயும் கூடுதலாக உள்ளது.எனவே, மத்திய அரசு தன் வரியை மேலும் குறைக்க வேண்டும்.

2021 நவம்பரில் அறிவித்த வரி குறைப்பால், தமிழகத்துக்கு ஆண்டு வருவாய் 1,050 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.தற்போதைய வரி குறைப்பால் தமிழகத்துக்கு, மேலும் 800 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
கொரோனா நிவாரண செலவினத்தை எதிர்கொள்ளும் மாநிலங்களின் நிதி நிலைமை மீது, இது மிகப்பெரிய சுமை மற்றும் நெருக்கடியை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் மீதான வரியை, மத்திய அரசு பலமுறை உயர்த்திய போது, அது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசிக்கவில்லை. மத்திய அரசின் வரி அதிகரிப்பு, தற்போது பகுதியளவு குறைக்கப்பட்டாலும், அந்த நடவடிக்கை 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. எனவே, மாநிலங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என, மத்திய அரசு எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.