ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எஞ்சிய 6 தமிழரை விடுதலை செய்ய கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
உதகை சென்ற முதல்வர், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவு நாளன்று, அவரது கொலை தொடர்பாக சிறையில் இருக்கும் 6 பேரை விடுவிப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இருப்பது தேவையற்றது. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது. மேலும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இதுபோன்ற ஆலோசனை நடத்தி இருப்பது என்பது தேவையற்றது. மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு தமிழக மக்கள் வெறுக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இது கூட்டணிக் கட்சியான காங்கிரசின் உணர்வுகளுக்கு 100% எதிராக அமைந்துள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் பதவி ஆசைதான் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மன வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஏன் வாய்மூடி மௌனமாக இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.