சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர் ஆர் பிரியாணி தயாரிக்கும் இடத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி ஆய்வின் மூலமாக 3500 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சிகளை கைப்பற்றியுள்ளனர்.
ஆன்லைனில் ஆர்டர் செய்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் இருந்து வாங்கப்பட்ட இறைச்சிகள் தரமற்றதாக இருந்ததை அடுத்து ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. விலை கொடுத்து வாங்கப்பட்ட இறைச்சி சரியான முறையில் வழங்கப்படவில்லை என்று வந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 3500 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சதீஷ் கூறுகையில், சேலம் ஆர்ஆர் உணவகம் அளித்த புகாரின் அடிப்படையில் இறைச்சிகள் அனைத்தையுமே கைப்பற்றி விட்டோம். கெட்டுப்போன இறைச்சி குறித்து தெரிந்து கொள்ள கால்நடை மருத்துவமனைக்கு மாதிரிகளை அனுப்பி வைக்க உள்ளோம். ஆர்டர் டெலிவரி செய்த ஜொமாட்டோ நிறுவனம் தான் இதற்கு பதில் கூற வேண்டும். தொடர்ந்து கர்நாடகாவில் எந்த இடத்தில் இந்த இறைச்சி வெட்டப்பட்டது, எந்த நிறுவனம் மூலம் பெறப்பட்டது என்ற முழு விசாரணையை மேற்கொள்ள உள்ளோம். ப்ரீசரில் வைத்த இறைச்சிகளே கெட்டு போயிற்று என்றால் எப்படி? இந்த இறைச்சி வேறு எந்த மாதிரியான உணவகங்களுக்கு சென்றன என்பது குறித்து விசாரிப்போம். எதுவாக இருந்தாலும் ஆய்வறிக்கைக்கு பிறகே உண்மை தெரியவரும். ஆனால் சேலம் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் புகாரின் பேரில் நாங்கள் அங்கு சென்ற போது இறைச்சிகளிலிருந்து அழுகிய வாடை வீசியது என்றார்.
ஆரணியில் கெட்டு போன இறைச்சியால் செய்யப்பட்ட உணவை சாப்பிட்ட சிறுமி பலி, கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி உள்ளிட்ட செய்திகள் வெளியான நிலையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆங்காங்கே அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த சோதனையில் தவறு இருப்பது கண்டறியப்பட்டால் அந்த உணவகம் மீது நடவடிக்கையும் பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.