அண்ணாமலை சொந்த ஊருக்கு வர முடியாது: அமைச்சர் பன்னீர்செல்வம்

தி.மு.க.,வுக்கு சவால் விடும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சொந்த ஊரான கரூருக்குகூட வர முடியாது என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால், கோட்டையை முற்றுகையிடுவோம் என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். இந்நிலையில், அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில், கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் நேற்று முன்தினம் இரவு நடந்த தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக வேலை பார்த்தபோது, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரக்கூடாது என பேசினார். தற்போது, தமிழகத்தின் மீது அக்கரை உள்ளவர்போல் பேசுகிறார். தமிழக முதல்வருக்கு, 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என, சவால் விடுகிறார்.

ஸ்டாலின் பல்வேறு சவால்களை சந்தித்துதான் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். முதல்வருக்கு சவால் விட அவருக்கு தைரியம் எங்கிருந்து வந்தது. அண்ணாமலையின் சவால் ஸ்டாலினுக்கு சாதாரணம். சொந்த ஊரான கரூருக்கு கூட அண்ணாமலையால் வர முடியாது. உங்க மாவட்டத்திற்கு வாங்க பார்க்கலாம். அண்ணாமலை தமிழகத்தில் மதக்கலவரத்தை துாண்டுகிறார். மத்தியில் அவர்கள் பிரதமராக இருந்தால், தமிழகத்தில் எங்களுக்கு என்ன. அதுபற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். இந்த சவால்களை எல்லாம் பார்த்து வளர்ந்த கட்சிதான் தி.மு.க. இவ்வாறு, அவர் பேசினார்.