பெட்ரோல், டீசல் மீதான வரியை, மாநிலங்களும் குறைக்க வேண்டும்: தமிழிசை

பெட்ரோல், டீசல் மீதான வரியை, மாநிலங்களும் குறைக்க வேண்டும் என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார்.

சென்னை, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள, ‘மெப்ஸ்’ சிறப்பு பொருளாதார மண்டலத்தில், சிறப்பு ஏற்றுமதி விருதுகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. விருதுகள் வழங்கி, கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

கொரோனா தொற்றுக்கு பின், முக கவசம் இன்றி அனைவரும், இதுபோன்ற கூட்டங்களில் கூடுவதற்கு, தடுப்பூசி மட்டுமே காரணமாகி உள்ளது. நான் மருத்துவ கல்லுாரி மாணவியாக இருக்கும் போது, தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகாதா என, எதிர்பார்த்து இருப்போம். ஆனால், கொரோனாவுக்காக நாம் கண்டுபிடித்த தடுப்பூசி, 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் முயற்சியால், நாடு முழுதும் உள்ள, 775 மாவட்டங்களும் ஏற்றுமதி முனையமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பின், கடந்தாண்டு ஏற்றுமதி துறையில் வர்த்தகம் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு தயாரிப்புகள் மீதான மோகத்தை மாற்ற உருவாக்கப்பட்ட, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு, மத்திய, மாநில அரசுகளுடன், அனைத்து நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்கின்றன.

இதுபோன்ற திட்டங்களால், புதுச்சேரியில் தயாரிக்கப்படும் ‘டெரக்கோட்டா’ சிலைகளுக்கும், புவிசார் குறியீடு வழங்கப்பட்டு, அவற்றை உருவாக்கும் முனுசாமி என்ற கலைஞருக்கும் மரியாதை கிடைத்துள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இல்லாத நிலையிலும், 3,000 கோடி ரூபாய்க்கான ஏற்றுமதி நடந்துள்ளது. அடுத்த, மூன்று ஆண்டுகளில், 5,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 1.20 லட்சம் பேருக்கு புதிய வேலை வாயப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் தமிழிசை அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுச்சேரியில், பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு அனைத்து மாநிலங்களும், ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தபோதே, புதுச்சேரியில் 7 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது, மத்திய அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதால், மற்ற மாநிலங்களை விட, புதுச்சேரியில் விலை குறைவாக உள்ளது. மத்திய அரசு போல, மாநில அரசுகளும், வரியை குறைத்தால், மக்களுக்கு பயன்னுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.