முஸ்லிம்களை இனப் படுகொலை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக முஸ்லிம்களைத் தூண்டிவிட பாஜக முயற்சிக்கிறது என்று, ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சித் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முப்தி குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரில் பிடிபி கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், ‘மதராஸாக்கள் மூடப்படவேண்டும்’ என்ற அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மாவின் கருத்து குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்து மெகபூபா முப்தி கூறியதாவது:-
இது ஒன்றும் புதிதல்ல. இந்து ஆசிரமங்களில் அவா்களுக்கு வாள் மற்றும் வில்-அம்பை வைத்து சண்டையிடும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தியாவை குஜாரத்தைப் போன்று அல்லது உத்தர பிரதேசத்தை மாதிரியாக கொண்டு மாற்றுவதற்கான போட்டி நடைபெற்று வருகிறது. அஸ்ஸாம் முதல்வா் அதற்கு ஒரு படி மேலே செல்ல விரும்புகிறாா். பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகின்றனா் என்பதை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும். மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் என நினைத்து இந்து சமூகத்தைச் சோ்ந்த முதியவா் கொலை செய்யப்பட்டாா்.
நாடு கட்டமைக்கப்பட்ட ‘மதச்சாா்பின்மை’ என்ற அடித்தளத்தை இடிப்பது குறித்தும், அரசியலமைப்பு சட்டத்தை துண்டிப்பது குறித்தும் அவா்கள் பேசி வருகின்றனா். முஸ்லிம்களை யாா் அதிகம் துன்புறுத்துவது என்ற போட்டி பாஜக ஆளும் மாநில முதல்வா்களிடையே நடைபெற்று வருகிறது. முஸ்லிம்களை இனப் படுகொலை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக முஸ்லிம்களைத் தூண்டிவிட அவா்கள் முயற்சித்து வருகின்றனா். குஜராத் அல்லது உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலைப்போல நாட்டின் வேறு பகுதிகளிலும் நடத்துவதற்கான வாய்ப்பை எதிா்பாா்த்துள்ளனா்.
1947-ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் சண்டையிட்டுக்கொள்ளும் வகையில் ஆங்கிலேய ஆட்சியாளா்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போல, பாஜக முதல்வா்களும், அமைச்சா்களும் தற்போது செய்து வருகின்றனா். துரதிருஷ்டவசமாக, நாட்டிலுள்ள இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள் என அனைவருக்குமான நமது பிரதமா், இவற்றை மெளனமாக பாா்த்துக்கொண்டிருக்கிறாா். அவருடைய அமைதி, செய்வதெல்லாம் சரி, ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்ன எண்ணத்தை கட்சியினரிடையே ஏற்படுத்தி வருகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளித்த சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் நோக்கம், தற்போது ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டு வருகிறது. எஸ்எஸ்ஆா்பி என்ற பணியாளா் தோ்வு அமைப்பு உருவாக்கப்பட்டு, உள்ளூா் பணிகளில் வெளிமாநில நபா்கள் பணியமா்த்தப்பட்டு வருகின்றனா். ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த இளைஞா்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனா். பொருளாதார ரீதியில் அவா்கள் அதிகாரமற்றவா்களாக ஆக்கப்பட்டு வருகின்றனா். இதனை எதிா்த்து உள்ளுா் மக்களுடன் இணைந்து அமைதி வழியில் பிடிபி போராட்டம் நடத்தும். இவ்வாறு அவா் கூறினாா்.