தி.மு.க. அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்: சுப்பிரமணியசாமி

இந்து கோவில்கள் மற்றும் மரபுகளில் தொடர்ந்து தலையிட்டு, சிக்கல்களை ஏற்படுத்த முயலும் தி.மு.க., அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து தினமலர் நாளிதழுக்கு சுப்பிரமணியசாமி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

ஒரு பக்கம் இந்து அறநிலையத் துறை வாயிலாக, இந்து கோவில்களுக்கு சிறப்பு செய்வது போல காட்டி கொள்ளும் தி.மு.க., அரசும், அமைச்சர் சேகர்பாபுவும், இந்துக்கள், கோவில்களுக்கு எதிராக செயல்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். தமிழகத்தில், தி.மு.க., எப்போது ஆட்சி பொறுப்புக்கு வருகிறதோ, அப்போது இந்து மக்கள் கொச்சைப்படுத்தப்படுவதும், இந்து கோவில்களுக்கு ஆபத்து ஏற்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்ததால், அந்த எண்ணத்தில் இருந்து மாறுபட்டிருப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ‘அப்படி யாரும் நினைக்க வேண்டாம்; நாங்கள் பழைய தி.மு.க., தான்’ என்று சொல்லாமல் சொல்வது போல, தற்போதைய தி.மு.க., ஆட்சி நடக்கிறது.

இந்த ஆட்சி வந்தது முதல், பல இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன. இப்போது, சிதம்பரம் பொது தீட்சிதர்களுக்கு சொந்தமான நடராஜர் கோவிலுக்குள்ளும் புகுந்து குழப்பம் விளைவிக்கின்றனர். அந்த கோவிலுக்குள் பாரம்பரியமாகவும், புனிதமாகவும் கடைப்பிடிக்கப்படும் கனகசபைக்குள் புகுந்து, ஆகமத்தை கெடுத்து, சம்பந்தமில்லாதவர்களை வைத்து பாடல் பாடும் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்திருக்கின்றனர். உச்ச நீதிமன்றத்துக்கு சென்று போராடி, சிதம்பரம் நடராஜர் கோவிலை, அங்கிருக்கும் பொது தீட்சிதர்களுக்கு சொந்தமானது தான் என, உத்தரவு பெற்று கொடுத்திருக்கிறேன். ஆனாலும், தி.மு.க., அரசு அதை ஏற்க தயாரில்லை. குழப்பத்தை ஏற்படுத்த, இந்து அறநிலைய துறை வாயிலாக தொடர்ந்து முயற்சிக்கிறது.

சிதம்பரத்தில் இருக்கும் திராவிட கட்சியினர், விடுதலை புலிகள் ஆதரவாளர்களை, அரசு தரப்பினரே கிளப்பி விட்டுஉள்ளனர். அவர்கள், தீட்சிதர்களுக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் எதிராக தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். இனியும் இந்த விஷயங்களை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவது, நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடுக்க போகிறேன். அதற்கு முன், தமிழக அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன். இந்து விரோத அணுகுமுறையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதற்கான பலனை அனுபவிக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.