மத்திய அரசு சமஸ்கிருதம் மொழி பேச கோடி கோடியாய் செலவு செய்கிறது. ஆனால் அதை பேச 1000 பேருக்கு மேல் ஆள் இல்லை என, திமுக எம்பி கனிமொழி கூறினார்.
சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி பங்கேற்றார். பெரும்பிடுகு முத்தரையரின் படத்துக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். புரட்சி சங்கங்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் கனிமொழிக்கு வீரவாள் வழங்கப்பட்டது. இதில் கனிமொழி பேசியதாவது:-
கிபி 705ம் ஆண்டில் இருந்து 745 வரை 40 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்கூறிய ஒரு அரசர் தான் கண்ட 16 போர்களத்தில் வெற்றி வாகை சூடி இருக்கக்கூடிய ஒரு அரசர் தான் நாம் கொண்டாடக் கூடிய மிகப்பெரிய தலைவர். தற்போது தமிழர்களின் பெருமையை ஒடுக்கிவிடலாம் என்றும் வெளியில் தெரியக்கூடாது என அனைத்தும் செய்து கொண்டிருக்கும் காலத்தில் அப்போதே அவர் தங்களுடைய பெருமைகளை கல்வெட்டில் செதுக்கி வைத்துள்ளார். இங்குள்ளவர்கள் எங்கள் உரிமை எங்கள் குரல் என பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் நாம் அனைவரும் ஒன்று. தமிழ் இனம் என்பதுதான் நாம் அனைவரையும் இணைத்து வைத்திருக்கிறது என்ற அந்த அடிப்படையிலேயே இதை விட பெரிய எதிரியை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
மத்திய அரசு சமஸ்கிருதம் மொழி பேச கோடி கோடியாய் செலவு செய்கிறது. ஆனால் அதை பேச ஆள் இல்லை. கோவிலில் வேண்டுமென்றால் பூஜைகள் செய்யலாம். ஆனால் பேச 1000 பேருக்கு மேல் ஆள் இல்லை. தமிழர்களின் தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது. தொன்மையும் தொடர்ச்சியும் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி தான். அந்த தமிழனுடைய தமிழை பாதுகாக்கதான் திராவிட இயக்கம் போராடுகிறது. இதற்காக அன்று கருணாநிதி போராடினார். இன்று ஸ்டாலின் பேராடுகிறார். இதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
திமுக என்றைக்குமே வாக்கு வங்கி அரசியல் செய்தது இல்லை. இலங்கையில் இருந்து வரும் சகோதர, சகோதரிகளுக்கு வாக்கு வங்கி கிடையாது. ஆனாலும் அவர்களின் உரிமைக்காக வாழ்க்கையை மேம்படுத்த சிந்திக்க கூடிய ஆட்சி தான் திமுகவின் ஆட்சி. மத்திய அரசு நம் மீது புகுத்தக்கூடிய புதிய கல்வி கொள்ளையால் நம்பிள்ளைகள் எல்லாம் மருத்துவ கல்லூரிக்கு செல்ல முடியாது. இணைந்து போராட வேண்டும் எந்த கல்வி எடுத்தாலும் நுழைவு தேர்வை எழுதுவிட்டு உள்ளே செல்ல வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எதிர்த்து நாம் போராட வேண்டிய காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அதனால் நாம் தனி தனியே போராடக்கூடிய நேரம் இது இல்லை. நாம் அனைவரும் ஒன்றாக திராவிடர்களாக சுயமறியாதைகாரர்களாக பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் வந்த நாம் ஸ்டாலினோடு நின்று போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.