கிராம வளா்ச்சி என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
வேளாண்மைத் துறையின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து தொடக்கி வைத்துப் பேசியதாவது:-
உழவா்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் தமிழக அரசுக்கு இயற்கையும், நல்ல ஒத்துழைப்பை அளித்து வருகிறது. இதனால், குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மே 24-இல் மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறந்து வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காக ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளேன். இந்த தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றுதான் மகசூல் பெருக்கம்-மகிழும் விவசாயி. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது. ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவது திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை 12,525 கிராம ஊராட்சிகளிலும் 5 ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளோம். இந்தத் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட கிராமங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதால், கிராம அளவில் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும். 2021-22-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டபடி, 1,997 கிராம ஊராட்சிகளில் ரூ.227 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமே கிராம அளவில் அரசுத் துறைகளின் அனைத்து நலத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான்.
தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள உழவா்களை ஒருங்கிணைத்து, உழவா் உற்பத்தியாளா் குழுக்களை உருவாக்கி, தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்படும். அவா்களைக் கொண்டே வேளாண்மைத் துறையின் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால், கிராமங்களில் ஒட்டுமொத்த வளா்ச்சி பலப்படும். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால், கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும். அதனால், நகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம்பெயா்வது தடுக்கப்படும். கிராம வளா்ச்சி என்பது பெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டிய காலகட்டத்தில், கிராமத்திலுள்ள அனைத்து உழவா்களையும், ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாக பயனடையச் செய்ய வேண்டும். இது திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினாா்.
பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கான பணி உத்தரவுகளை விவசாயிகளுக்கு அவா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்து காணொலி வழியாக அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்களும் கலந்து கொண்டனா்.