ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 20 இடங்களில் பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை அமைந்தகரையில் தலைமை இடமாக கொண்டு ஆருத்திரா கோல்ட் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் பி ராஜசேகரன் என்பவர் ஆவார். தமிழகத்தில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச கிளைகளை ஆருத்திரா கோல்டு நிதி நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிறுவனம் நகை மீதான கடன் மற்றும் முதலீடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டியாக கொடுக்கப்படும் என்ற விளம்பரம் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவியது. குறிப்பாக மார்ச் மாதம் இந்த விளம்பரத்தை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்து வந்துள்ளனர். அதிலும் கடந்த மே 6-ம் தேதி ஆரணி சேவூர் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் கிளை ஒன்றை திடீரென உருவாக்கியுள்ளது. ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 36 சதவீதம் வட்டி அளிப்பதாக ஏற்கனவே அந்த விளம்பரத்தின் அடிப்படையில் இந்த நிறுவனம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பி பொதுமக்கள் பலரும் முதலீடு செய்தனர்.
இந்நிலையில் வங்கிகளே மிக குறைந்த வட்டி அளிக்கும் நிலையில் முப்பத்தி ஆறு சதவீதம் வட்டி எவ்வாறு கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. பொதுமக்களிடம் ஆசை காட்டி பணத்தை மோசடி செய்யும் வேலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் ஆரணி சேவூர் கிளையில் ஆருத்ரா கோல்ட் நிதிநிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். 60 சவரன் தங்க நகைகள், 44 செல்போன்கள், 6 லேப்டாப்கள், 48 கணினி ஹார்டு டிஸ்க்குகளை பறிமுதல் செய்துள்ளனர். முதலீட்டாளர்களின் பணம் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ள 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா நிறுவனங்களின் இயக்குனர்களான பாஸ்கர், மோகன்பாபு, உஷா, ஹரிஷ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.