அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
அமெரிக்காவின் ரிச்சர்ட்சன் பகுதியில் உள்ள பெர்க்னர் உயர்நிலை பள்ளிக்கு மாணவன் ஒருவன் துப்பாக்கியுடன் சென்றுள்ளான். இதனை கவனித்த சிலர் ரிச்சர்ட்சன் போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். மாணவனிடம் துப்பாக்கி உள்ளது என்றும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, உடனடியாக போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையை நடத்தினர். இதில் சந்தேகத்திற்குரிய மாணவன் பெர்க்னர் உயர்நிலை பள்ளியில் படித்து வருபவன் என தெரிய வந்துள்ளது. ஆனால், மாணவனிடம் எந்த ஆயுதமும் இல்லை. இதன்பின் ஈஸ்ட் ஸ்பிரிங் வேலி சாலை பகுதியில் நிறுத்தியிருந்த மாணவனின் வாகனத்தில் சோதனை செய்ததில், ஏ.கே.-47 ரக துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதி இல்லாத பள்ளி பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த விதிமீறலுக்காக மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், மாணவரின் வயது உள்ளிட்டவற்றை முன்னிட்டு வேறு எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன் டெக்சாசில் பள்ளி ஒன்றில் ஆயுதமேந்திய 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்ட சூழலில், பள்ளி மாணவர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரம் பற்றி அதிபர் பைடனும் வருத்தம் தெரிவித்து உள்ளார். இதற்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, பெர்க்னர் உயர்நிலை பள்ளி மற்றும் அருகில் உள்ள ஸ்பிரிங்ரிட்ஜ் பள்ளி கூடம் ஆகியவை அமைந்த பகுதியில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.