நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
நேபாள நாட்டின் பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு தாரா ஏர் நிறுவனத்தின் 9NAET ட்வின்- என்ஜின் விமானம், காலை 9.55க்கு புறப்பட்டுள்ளது. கிளம்பிய சில நிமிடங்களிலேயே அந்த விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து விமானம் எங்கு சென்றது என்ற விவரம் இல்லை. கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த அந்த விமானத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் இருந்ததாகவும், மற்ற அனைவரும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொகாரா அருகில் உள்ள தலகிரி என்ற மலைப்பகுதிக்கு மேலே சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த விமானம் விபத்துக்குள்ளானதா என்ற விவரம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஜோம்சோம் விமான நிலைய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், அப்பகுதியில் உள்ள காசா எனும் இடத்தில் அதிக சத்தம் கேட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவலைப் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கும் அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக காத்மண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. தீவிர தேடுதல் வேட்டை அந்த விமானம் கடைசியாக தொடர்பில் இருந்த தலகிரி மலைப் பகுதிக்கு ஒரு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அதில் பயணித்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நேபாளத்தில் பொகாராவில் இருந்து 22 பயணிகளுடன் கிளம்பிய நிலையில் மாயமான விமானம், நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தின் முழுமையான நிலை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள ராணுவத்திற்கு உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின்படி, தாரா ஏர் நிறுவனத்தின் அந்த விமானம் மணபதி ஹிமாலின் நிலச்சரிவின் கீழ் லாம்சே ஆற்றின் முகப்பில் விழுந்து நொறுங்கியதாக தெரியவந்துள்ளது. நேபாள ராணுவம் அந்த இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் நாராயண் சில்வால் தெரிவித்துள்ளார்.