ரஷ்யா ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை!

1,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்தது.

உக்ரைன் மீது ரஷ்யா 95-வது நாளாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில், போருக்கு மத்தியில் ரஷ்யா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில், ரஷ்யா நேற்று ஜுர்கான் என்ற புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கிய அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. போர் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை ஒலியை விட 9 மடங்கு வேகமாக சென்று இலக்கை தாக்கும் வல்லமை பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் அதிவேக ‘பாலிஸ்டிக்’ அல்லாத ஏவுகணை என சொல்லப்படுகிறது.