நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் உடல்களும் மீட்பு!

நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் உடல்களும் மீட்பு. விமானத்தின் கருப்பு பெட்டியையும் மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.

நேபாளத்தில் உள்ள தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் நேற்று காலை 9.55 மணிக்கு 4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவிலிருந்து புறப்பட்டது. இது புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமானது. இந்த விமானத்தின் ரேடார் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த விமானம் மஸ்தாங் மாவட்ட மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானம் பள்ளத்தில் சிதறிக் கிடந்த நிலையில் அதில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது. இந்த நிலையில் மீட்பு படையினர் 22 பேரின் உடல்களையும் மீட்டனர். அதில் நேபாளத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது போல் இந்தியாவை சேர்ந்தவர் 4 பேர் பலியாகியுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து விமான நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அவர்கள் அசோக் குமார் திரிபாதி (54), அவரது மனைவி வைபவி பண்டேகர் (51), மகன் தனுஷ் திரிபாதி (22), மகள் ரித்திகா திரிபாதி (15) ஆகியோர் ஆவர். வைபவிக்கும் அசோக்குமாருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆகியுள்ளது. கோர்ட் உத்தரவின்படி ஆண்டுக்கு 10 நாட்கள் இவர்கள் கூடியிருக்க வேண்டும். அந்த உத்தரவின்படி 10 நாட்கள் விடுமுறைக்காக நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதற்காக அவர்கள் தாரா ஏர் விமானத்தில் பயணித்தனர். தற்போது 4 பேருமே பலியாகிவிட்டனர். ஆண்டுக்கு 10 நாட்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது அவர்களுக்கு எமனாக மாறிவிட்டது.

இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது. அதனையும் மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். இனி அதனை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.