ஊழல்களை தட்டிக்கேட்கும் ஒரே கட்சியாக பா.ஜனதா விளங்குகிறது என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பண்ணையூரில் மத்திய பா.ஜனதா அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலைக்கு பூரண கும்ப மரியாதையும், யானையை வைத்து மாலையும் அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழித்து ஒரு பொதுவான மக்களுக்கான ஆட்சியை கொண்டுவர வேண்டும். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்வதில் சிறந்த கட்சி தி.மு.க. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கக்கூடிய நியூட்ரிஷன் ஹெல்த் மிக்சில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மின்சார தொகுப்பில் ஊழல், பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஊழல் உள்பட பல ஊழல்களை தி.மு.க. செய்துள்ளது. அந்த ஊழல்களை தட்டிக்கேட்கும் ஒரே கட்சியாக பா.ஜனதா விளங்குகிறது.
கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கும் அதற்கு இடம் கொடுத்த நபர்களுக்கும் அதன் பக்கத்தில் குடியிருக்கும் மக்களுக்கும் மட்டுமே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரி, ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கொடுத்துள்ளது. வங்கி கணக்குகள் இல்லாத 45 கோடி மக்களுக்கு கணக்குகளை உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 5 கோடி கழிவறைகள் மட்டுமே இருந்தது. மோடி அரசின் 8 ஆண்டு ஆட்சி காலத்தில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆட்சியை விட இந்தியா முழுவதும் 9 கோடி நபர்களுக்கு கியாஸ் இணைப்பு மத்திய அரசு வழங்கியுள்ளது.
அம்பேத்கர், பட்டியலின சமுதாய மக்களை உயர்த்த வேண்டும் என்று எண்ணினார். ஆனால் மோடி பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு தலைவராகவே உயர்த்தி அழகு பார்த்துள்ளார். உலக நாடுகளை விட டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முன்னணி நாடாக இந்தியா உயர்ந்து இருப்பது நமக்கு கிடைத்த பெருமை. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவின் முடிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனமும், விவசாயிகளுக்கு மாடு, கன்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்று கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் தங்களை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டனர்.
