பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள இந்து கோயில் தாக்குதல் நடத்தப்பட்டு, சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர். இங்கு சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களின் கோயில்கள் மீது தீவிரவாதிகள், மர்மநபர்கள் நடத்தும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கராச்சியின் கோரங்கி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் மீது நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 8 மர்மநபர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தானில் குறிப்பாக கோரங்கி பகுதியில் வசிக்கும் இந்துக்களிடையே அச்சம், பீதி நிலவுகிறது.

இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அங்கு விரைந்த கோரங்கி காவல் நிலைய போலீசார் மர்மநபர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் நடக்காதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.