மூழ்கிய 2 கப்பல்களில் ரூ.1 லட்சம் கோடி தங்கம்!

மேற்கு அட்லாண்டிக் கடல் பிராந்தியத்தில் உள்ள கடற்பகுதியில் மூழ்கிய இரு கப்பல்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1708ல் ‘சான் ஜோஸ் கலியன்’ என்ற ஸ்பெயின் போர் கப்பல் கொலம்பியா நோக்கி சென்று கொண்டிருந்தபோது பிரிட்டன் படைகளின் தாக்குதலில் கடலில் மூழ்கியது. இந்நிலையில் ஸ்பெயின் கப்பல் மூழ்கிய இடத்திற்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கியுள்ளது சமீபத்தில் தெரியவந்தது. இந்த கடல் பகுதியில் ஆய்வு வாகனத்தை இறக்கி ‘ரிமோட்’ வாயிலாக ஆராய்ந்ததில் மூழ்கிய இரு கப்பல்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தங்க நாணயங்கள் மண் பாண்டங்கள் பீங்கான் கோப்பைகள் ஆகியவற்றுடன் ஒரு பீரங்கியும் இருப்பதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கப்பல்களில் முகப்பு பகுதி சேதமடையாமல் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ”கப்பலில் உள்ள தங்கம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டு மேலும் பல கண்டுபிடிப்புகளுக்கான நிதி வசதிக்கு பயன்படுத்தப்படும்” என கொலம்பியா அதிபர் இவான் டுக்யூ தெரிவித்துள்ளார்.