காசா பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் படை இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து, இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 1990-களில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் கையெழுத்தான, ஆஸ்லோ ஒப்பந்தப்படி காசா முனை சுயாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், உண்மையில் காசா முனை இன்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முற்றுகையின் கீழ்தான் இருந்து வருகிறது. காசா முனைப் பகுதியில் செல்வாக்குடன் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே, அப்பகுதி மீது 2008-ஆம் அண்டு தொடங்கி ஒரு சட்டவிரோதமான பொருளாதாரத் தடையை விதித்தது இஸ்ரேல். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் ஜெனின் பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு வந்த காரை சோதனை செய்ய முயற்சித்தனர். ஆனால், நிற்காமல் சென்ற காரில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலின் போது காரில் வந்த பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, காசா பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் படை, இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இன்று அதிகாலை, தெற்கு இஸ்ரேலில் உள்ள இஸ்ரேலிய குடிமக்களை நோக்கி ஹமாஸ் ராக்கெட்டை ஏவி தாக்கியதை அடுத்து இந்த பதிலடி தாக்குதல்கள் நடந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் புகை மூட்டம் நிலவியது. இஸ்ரேலிய போர் விமானங்கள், ஹமாஸ் இராணுவச் சாவடிக்குள் அமைந்துள்ள ஆயுத உற்பத்தித் தளத்தையும், ஹமாஸுக்குச் சொந்தமான மேலும் மூன்று இராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்கின. அதில் இறந்தவர்களில் ஒருவர் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஆவார் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர், இருதரப்புக்கும் இடையே எல்லை கடந்த தாக்குதல் மீண்டும் இன்று தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.