இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் 50 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் வரவுள்ள உணவு நெருக்கடியினால் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலானவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரம சிங்கே எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் நாட்டின் உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு அனைத்து எம்.பி.க்களும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நிலைமையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க உறுதிகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நாட்டில் தரிசாக கிடக்கிற 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை விளை நிலைங்களாக மாற்றி உணவு தானிய உற்பத்தியை பெருக்கி எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிற இயக்கத்தில் ராணுவம் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உணவு பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்கு ராணுவம், பசுமை விவசாய வழிகாட்டும் குழுவை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இலங்கையில் நாளை முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட உள்ளன. பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது.
இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் மூட அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம் சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதைப்போல பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்து உள்ளது. மேலும் கடுமையான மின்வெட்டும் நிலவுவதால் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.