உக்ரைன் போர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என கணிக்க முடியாது. இது பல ஆண்டுகள் கூட நீடிக்கலாம் என்று நேட்டோ பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்து உள்ளார்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிய போதும் மற்ற இடங்களை பிடிக்க கடுமையான சண்டை நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது.
இந்தநிலையில் உக்ரைன் போர் மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என நேட்டோ பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
உக்ரைன் போர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என கணிக்க முடியாது. இது பல ஆண்டுகள் கூட நீடிக்கலாம். எனவே அதற்கு ஏற்றாற் போல நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உக்ரைன் போர் நீண்ட காலத்துக்கு நடைபெற்று வருவதால் நேட்டோ உறுப்பு நாடுகளும். நட்பு நாடுகளும் உக்ரைன் நாட்டுக்கு கொடுத்து வரும் ஆதரவை குறைத்து விடக்கூடாது. இந்த போரால் ஜரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்பது உண்மைதான். உக்ரைனுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி வருவதாலும் உணவு பொருட்கள், எரி பொருள் விலை ஏற்றத்தால் ஜரோப்பிய நாடுகள் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறது. இதற்காக ஜரோப்பிய நாடுகள் பின் வாங்ககூடாது. எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் நட்பு நாடுகள் உக்ரைனை கை விட்டு விடக்கூடாது. உக்ரைன் வீரர்கள் சந்தித்து வரும் இழப்புகளை ஒப்பிடுகையில் உணவு, எரிபொருள் விலை ஏற்றத்தால் ஏற்படும் இழப்பு மிகவும் சிறிது தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.