காங்கோவில் பெண்ணை கடத்தி, நர மாமிசம் சாப்பிட வைத்து சித்ரவதை!

காங்கோ நாட்டில் பெண்ணை கடத்திய கிளர்ச்சியாளர்கள், அவரை பலாத்காரம் செய்து, நர மாமிசம் சாப்பிட வைத்து சித்ரவதை செய்துள்ளனர் என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பெண் உரிமை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ, உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நாட்டின் நிலைமை குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மாதந்தோறும் ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், சர்வதேச பெண்கள் உரிமைகள் அமைப்பின் தலைவர் ஜூலினா லுசெங்கே கூறியதாவது:-

காங்கோவில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள், சமீபத்தில் ஒருவரை கடத்திச் சென்றனர். கிளர்ச்சியாளர்கள் கேட்ட தொகையை கொடுத்து, அவரை மீட்க, அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்றார். அந்தப் பெண்ணை கடத்திய கிளர்ச்சியாளர்கள், அவரை பலாத்காரம் செய்துள்ளனர். பின், ஒருவரை கொலை செய்த கிளர்ச்சியாளர்கள், அவரது குடல் பகுதியை வெட்டி எடுத்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்து சமைத்து தரும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்தப் பெண்ணும் சமைத்துக் கொடுத்துள்ளார். அந்த உணவை, அந்தப் பெண் உட்பட, தாங்கள் கடத்தி சிறை வைத்துள்ளவர்களுக்கு வழங்கி வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்துஉள்ளனர். சில நாட்களுக்கு பின், அந்தப் பெண்ணை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர்.

வீட்டுக்கு திரும்பும் வழியில், அந்தப் பெண்ணை மற்றொரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடத்தி, பலாத்காரம் செய்து, நரமாமிசத்தை சாப்பிட வைத்துஉள்ளனர். ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பி வந்த பெண்ணை, நான் சந்தித்த போது தான், நடந்த கொடுமைகள் தெரிய வந்தன. காங்கோவில் அமைதியை ஏற்படுத்தி, அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.