ரஷ்யாவிற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்களை ஈரான் வழங்குகிறது!

ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்களை ரஷ்யாவிற்கு ஈரான் வழங்குகிறது. டிரோன் பயன்பாடு குறித்து ரஷ்ய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா அந்நாட்டின் பல நகரங்களைக் கைப்பற்றியபோதும், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷ்ய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷ்யாவிற்கு ஈரான் வழங்கி வருகிறது. தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து ரஷ்ய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் ஈரான் செல்கிறார். சிரியா விவகாரம் குறித்து ஈரான், துருக்கியுடன் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிபர் புதின் பங்கேற்க உள்ளார் என கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சுமத்திய நிலையில், அதிபர் புதினின் ஈரான் பயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் ஐரோப்பாவில் ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான ரஷியாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மீது போரைத் துவங்கிய ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்தது. அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பாவில் உள்ள ரஷ்யாவின் சொத்துகளை முடக்குவதாகவும் அறிவித்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நீதி ஆணையர் டிடியர் ரெய்ண்டர்ஸ், பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து தற்போது வரை 13.8 பில்லியன் டாலர்(ரூ.1.10 லட்சம் கோடி) மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்களை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், முதல்கட்டமாக 5 உறுப்பு நாடுகள் மட்டுமே சொத்துகளை வழங்கியுள்ளன என்றும் விரைவில் மற்ற நாடுகளும் ரஷ்ய சொத்துகளை முடக்குவார்கள் என டிடியர் ரெய்ண்டர்ஸ் கூறியுள்ளார்.